Monday, November 3, 2008

பெரு மழை பெய்தது


நேற்றைக்கு மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் பொது, பல பேரிடம் இருந்து கைபேசியில் அழைப்பு வந்தது.... இரவு 8 மணிக்கு சன் டிவி யில் தலைவர் பேச்சு ஒலிபரப்பு என்று...


இந்த அழைப்புக்களில் பல எனது நண்பர்களின் பெற்றோர்களிடம் இருந்து வந்ததுதான் ஆச்சர்யம்...


8 மணிக்கு இன்னும் சில மணித்துளிகளே இருந்த நேரத்தில் சடாரென்று என் நண்பர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்தேன்...(அவர் வீட்டிற்கு நான் அடிக்கடி செல்லும் வழக்கமும் அன்னியோநியமும் உண்டு என்பதால் முன் அறிவிப்பு எதுவும் தேவைப்படவில்லை) அந்த நண்பரும் அவரது பெற்றோரும் குணத்தால் மிக சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் வீடு சற்று பொருளாதார ரீதியில் சுமாரான பகுதியில் உள்ளது... உள்ளே நுழைந்ததும். பார்த்தால், ஏற்கனவே சில தாய்மார்கள் 8 மணிக்காக ஆவலோடு உட்கார்ந்து இருந்தார்கள். நான் சென்ற போது, அந்த வீட்டில் நண்பர் இல்லை, அவர் வேறு ஒரு நண்பர் வீட்டில் நிகழ்ச்சியை பார்க்க சென்று இருந்தார்..நான் அவரிடம் வந்திருப்பதாக சொன்ன உடன், அவரும் மற்ற நண்பர்களும் என்னோடு ஆஜர்...


சரியாக 8 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.. அதற்குள் என் வீட்டில் இருந்து அழைப்பு, "ஏய், எங்க இருக்க, ரஜினி சன் டிவி இல ரஜினி பேசுறாரு, வர முடியலைன்னா, பக்கத்தில எங்கயாவது பாரு...."


ஒரு சினிமா நடிகரின் ரசிகர் மன்ற நிகழ்ச்சியைப் பாரு என்று எந்த தாயாவது, பெற்றோராவது இது வரை கூறியது உண்டா என்று மனதினுள் வியந்தபடி, "நான் பார்த்துட்டு இருக்கேன், நீங்களும் பாருங்க" என்று கூறிவிட்டு நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன்..


அதன் பிறகு, பெங்களூரில் இருந்து சக பதிவர் அருண்ஜி மற்றும் பல நண்பர்கள், எனக்கு இன்பார்ம் செய்த வண்ணம் இருந்தார்கள்... நானும் நன்றி தெரிவித்து விட்டு, நிகழ்ச்சியில் முழு கவனத்துடன் ஈடுபட்டேன்...
சில முக்கியமான கேள்வி பதில் சுவாரசியங்களை மட்டுமே இங்கே பதிகிறேன்...


"முதல்ல பெத்தவங்கள நீங்க கவனிங்க, மத்தவங்க உங்களை தானா கவனிப்பாங்க" இந்த பதிலைக் கேட்டதும் நமது நண்பரின் மூத்த சகோதரி, உணர்ச்சி வசப்பட்டு, "தம்பிங்களா நல்லா கேட்டுக்குங்க... அவரு சொல்றத கேட்டு நடந்தா ஒவ்வோர் வீடும் சொர்க்கம் மாதிரி இருக்குமே " என்றார்...


அடுத்து, "அந்தஸ்து என்பது நீங்க சமுதாயத்துக்கு செய்யற நல்ல விஷயங்கள பார்த்து தானா வரணும் கண்ணா, அத நாம தேடிப் போகக் கூடாது என்று தெளிவாக சொன்ன போதும்,
"பணம் ஜனம் ரெண்டும் சேர்ந்தா அங்க அரசியல் வரும், பிரச்சினை வரும்... நான் உங்க பணத்தை எடுக்க மாட்டேன், நீங்க என் பணத்தைக் கேட்காதீங்க... என்னால முடிஞ்ச நல்ல உதவிகளை, என் நேரடி கண்காணிப்பில் நான் செய்றேன்.. நீங்களும் உங்களால் முடிஞ்சத நீங்களே செய்யுங்க" என்ற போதும்,
ஒரு பெரியவர், "சபாஷ்டா, இவ்வளவு தைரியமா, காசை பத்தி பேசுறதுக்கு சரியான தில்லு, பெரியார் பேசற மாதிரி கட் அண்ட் ரைட்டா பேசுறாரே" என்று வியந்தார்..


கிருஷ்ணகிரியில் தாய் தந்தை நினைவிடம் பற்றி அவர் பதில் அளித்த போது, நான் எனது மூளையை பல்வேறு கோணங்களில் அலை பாய விட்டுக் கொண்டு இருந்த போது, அங்கு இருந்த ஒரு வயதான பெண்மணி, "அப்பா அம்மாவுக்கு கோயில் கட்டணுமாம், மகராசன்" என்று ஒரே வரியில் புரிந்து சொன்ன போது, எனக்கு சம்மட்டியில் அடித்ததுபோல் இருந்தது..


கடைசியாக, "நான் நல்ல கணவனாக, தந்தையாக, குடும்பத் தலைவனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என் கடமையை சரியாக செய்கிறேன், நீங்களும் அது போல் உங்க கடமையை சரியாக செய்யுங்க என்று சொன்ன போது, " கிட்டத்தட்ட எல்லாருமே கண் கலங்கிய நிலையில் ஒரு ஆனந்தத்தில் இருந்ததைக் காண முடிந்தது..


நிகழ்ச்சி முடிந்து மகிழ்ச்சியுடன் வரும்போது, மனதில் பல சிந்தனைகள்..இந்த மனிதனின் தொண்டனாக இருக்க, இன்னும் எவ்வளவு பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்னை என்று உணர்ந்தேன்... எனது கடமைகள் என் கண் முன்னே விஸ்வரூபமாகத் தெரிந்தது.....


ரஜினி சொன்னது போல் ஒருவருக்கு பல குரு ராஜர்கள் இருப்பார்கள், எனக்கும் அப்படியே; ரஜினி உட்பட.....


அன்புடன்,
ஈ ரா

Sunday, November 2, 2008

தெளிவான பார்வையே - உன் பெயர்தான் ரஜினியா

ஈழம் என்றால் ஒரு யுத்த பூமி, சோக பூமி.. அங்கு இருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்ற ஒரு மாயத் தோற்றத்தை தவிடு பொடியாக்கிய ரஜினி, அங்குள்ள மக்களின் அன்பையும், இனிமையையும், அவர்கள் துயரையும் பல கோடி தமிழர்களும் உணரும் வண்ணம் உணர்த்தி இருக்கிறார்.

ரஜினி பேசியதால் யுத்தம் நின்று விடப் போவதில்லை.. சிங்களரின் கொட்டமும் அடங்கப் போவதில்லை.. ஆனால், பல லட்சம் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்களின்பால் ஒரு கழிவிரக்கம் தோன்ற ஒரு தூண்டு கோலாக அவர் பேச்சு அமைந்தது என்றால் மிகையல்ல...

எவ்வளவோ பேர் எத்தனையோ மேடைகளில் பேசும் போதும், அவர்கள் உணர்ச்சிக்குப் பின்னால் ஒரு நம்பகமற்ற தன்மையும், சுய நலமும், அரசியல் ரீதியான சமாளிப்புகளும் தான் பிரதானமாகத் தெரியுமே தவிர அவர்களின் கருத்து எடுபடாது... மிகச் சிலர் உண்மையான உணர்வுகளை, சரியான முறையில் வெளிப் படுத்துவார்கள்... அந்த வகையில், தனது தெளிவான பேச்சின் மூலமும், தைரியமான கருத்தின் மூலமும், தனது பெரும் ரசிகர் கூட்டத்துக்கு மட்டும் அல்லாது உலகெங்கும் இருக்கும் கோடானு கோடி தமிழ் நெஞ்சங்களுக்கு நிதர்சனத்தைப் புரிய வைத்த பாங்கு என்றைக்கும் பாராட்டுக்கு உரியது...

நிதியையும் கொடுங்கள், நீதியையும் சொல்லுங்கள் என்று உரக்க குரல் கொடுத்து தான் தெளிவான பார்வை கொண்டவர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார் ரஜினி...

ராமேஸ்வரத்தில் ஈழருக்கு உதவி ஓடியிருக்க வேண்டிய வெள்ளத்தில் தம் வக்கிரங்களுக்கு வடிகால் தேடிக் கொண்ட வாயுள்ள ஜீவன்கள் இனியாவது திருந்தி ஓரணியில், சத்தியத்தின் பக்கம் நின்றால் சரித்திரம் அவர்களை வாழ்த்தும்...

மடியில் கனமில்லாத, சுய நலம் இல்லாத, இதை வைத்து அரசியலோ விளம்பரமோ தேட வேண்டியிராத, ஆட்சியை பிடிக்கவோ - தக்க வைத்துக் கொள்ளவோ தேவை இல்லாத சராசரி தமிழனின் உணர்வைப் படம் பிடித்து, அந்த உணர்வை எழுப்பிய ரஜினி என்னும் மனிதனுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்...

ஒரு நல்ல மனிதனின், வார்த்தைகள் எந்த விதமான நல்ல அதிர்வுகளை உருவாக்கும் என்பதை அவரது பேச்சைக் கேட்டவர்களும், படித்தவர்களும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள் - அவர்களும் நல்லவர்களாக, சுய நலம் இல்லாதவர்களாக இருந்தால்.....

நண்பர்களே,

ஓ பக்கங்களில் மட்டுமல்ல ஓராயிரம் பக்கங்களினாலும் சாதிக்க முடியாத சாதனையை "ஆம்பளைங்களாடா நீங்க?" என்ற ஒரே வாக்கியத்தில் சாதித்து சாமானியனை தட்டி எழுப்பும் சக்தி அந்த காந்தத்தில் உள்ளது... அந்தக் காந்தத்தின் அதிர்வலை மென் மேலும் பரவி, சமுதாய அவலங்களை சருகாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை....

ஈழத் தமிழர் விவகாரத்தை அரசியல் ஆக்கும் வியாதிகளின் கூச்சலுக்கு மத்தியில் ஆதாயம் கருதாமல் ஒலிக்கும் இந்தக் குரலுக்கு மதிப்புக் கொடுத்து உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்....

இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவரவர் கடவுளை வேண்டி, நம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் விரைவில் விடியல் பிறந்திட பிரார்த்திப்போமாக....

வாழ்க தமிழ், வாழ்க ரஜினி...

அன்புடன்
ஈ ரா

Saturday, November 1, 2008

ஆம்பளைங்களாடா நீங்க?


ஈழத் தமிழர் ஈரக்குலை நடுங்க வான் வழியும், வழி நெடுகும் குண்டுகளை வீசி கொலை பாதகம் செய்யும் சிங்கள அரசுக்கு, இதை விட கடுமையான ஒரு கண்டனத்தை யாராலும் பதிவு செய்ய முடியாது…..

இதை செய்த, தமிழ் பேசும் நல் தமிழரான ரஜினிகாந்த் அவர்களுக்கு உணர்வுள்ள ஒரு சராசரி தமிழனின் நன்றி…

வழ வழ எனவும் வள வளவெனவும் சம்பந்தமில்லாத கருத்துக்களை கூறி அரசியல் ஆதாயம் தேடும் பல நூறு குரல்களுக்கு மத்தியில் உயிரையும், உடைமைகளையும், மானத்தையும் இழந்த தாய்மார்களின், குழந்தைகளின் வலியை உலகெங்கும் உள்ள இரக்க மனம் கொண்ட நெஞ்சங்களுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் ஒரே வார்த்தையில் உணர்த்திய அந்த மனிதனுக்கு என் நன்றி……

அவனுக்கு, ஆம்பல் என்றும் வவ்வல் என்றும் பாடத்தான் தெரியும் என்று நினைத்து இருந்தவர்களுக்கு, தான் ஆம்பளை சிங்கம் என்று நிரூபித்ததற்கு நன்றி….

உயிர் போகும் பிரச்சினையில் ஒரு தனி மனிதனை புகழ்வதா என்று நினைக்கிறீர்களா? இது புகழ்ச்சி அல்ல, நன்றிக் கடன்…

ஆம்.. ” ஒ ” பக்கங்களில் அல்ல ஓராயிரம் பக்கங்களில் கூட அறிவு ஜீவிகளால் தட்டி எழுப்ப முடியாத சாமான்யனின் உணர்ச்சியை ஒரு வார்த்தையில் எழுப்பிய அந்த சக்திக்குத்தான் இந்த நன்றிக் கடன்…..
இன்றைக்கு, படித்த பல பெரும், அறிவு ஜீவிகள் பல பெரும் செய்யும் மூளை சலவைகளால் குழப்பம் அடைந்த பல இலட்சம் படித்தவர்களுக்கும் அதே சமயம் என்ன முடிவு, எது சரி என்று தெரியாத சாதாரண மக்களுக்கும் ஒரு பேச்சினால் புரிய வைக்க முடியும் என்று உணர்தியதற்க்குத் தான் இந்த நன்றிப் பதிவு…

இலங்கை தமிழர்கள் என்றாலே ஏதோ சண்டைக் காரர்கள், தீவிரவாதிகள் என்று பரப்பப்பட்ட செய்திகளால் மனம் குழம்பிக் கிடந்த பல பேருக்கு, அந்த மக்களின் இனிமையையும் அன்பையும் அவர்களின் துயரத்தையும் சொல்ல வேண்டிய முறையில் சொல்லிப் புரிய வைத்ததற்காகவும் தெளிய வைத்ததற்காகவும்தான் இந்த நன்றி….

ஒரே நாளில் ஒரே பேச்சில் லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களுக்கும், கோடிக்கணக்கான உலகத் தமிழர்களுக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்ததற்க்காகத்தான் இந்த நன்றி…..

சாமான்ய மக்களும், பெண்களும், சிறுவர்களும், முதியவர்களும் பாதிக்கப் பட்டால் அது எப்படிப் பட்ட நாடாக இருந்தாலும் அழிந்து விடும் என்று பல ராஜபக்ஷேக்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்கு நன்றி…

பல ஆண்டுகள் பல பலத்துடன் போரிட்டும் அழிக்க முடியா விட்டால் , உன் தோல்வியை ஒத்துக் கொண்டு, மக்களை நிம்மதியாக வாழ விடு என்று அறைகூவல் விடுத்ததற்கு இந்த நன்றி…

கொடுங்கோலால் புதைக்கப்பட்டவர்கள், விதைக்கப்படுகிறார்கள் என்று உணர்த்தியதற்கு நன்றி….

எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது என்ற உண்மையை சொல்லி, உச்ச பட்ச தொகையை அளித்து, உச்ச நட்சத்திரம் என்று நிரூபித்ததற்கு நன்றி……

நேர்மையான மனிதனே, இனி வரும் காலங்களில், உன் காந்த சக்தியை பெட்டிக்குள் பூட்டாமல், அதன் அலைகளை இது போன்ற நல்ல செயல்களில் தொடர்ந்து பரவ விட்டு, எங்களை ஆயிரமாயிரம் முறை நன்றி சொல்ல வைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டுகிறேன்….

அன்புடன்
ஈ ரா