Sunday, November 2, 2008

தெளிவான பார்வையே - உன் பெயர்தான் ரஜினியா

ஈழம் என்றால் ஒரு யுத்த பூமி, சோக பூமி.. அங்கு இருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்ற ஒரு மாயத் தோற்றத்தை தவிடு பொடியாக்கிய ரஜினி, அங்குள்ள மக்களின் அன்பையும், இனிமையையும், அவர்கள் துயரையும் பல கோடி தமிழர்களும் உணரும் வண்ணம் உணர்த்தி இருக்கிறார்.

ரஜினி பேசியதால் யுத்தம் நின்று விடப் போவதில்லை.. சிங்களரின் கொட்டமும் அடங்கப் போவதில்லை.. ஆனால், பல லட்சம் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்களின்பால் ஒரு கழிவிரக்கம் தோன்ற ஒரு தூண்டு கோலாக அவர் பேச்சு அமைந்தது என்றால் மிகையல்ல...

எவ்வளவோ பேர் எத்தனையோ மேடைகளில் பேசும் போதும், அவர்கள் உணர்ச்சிக்குப் பின்னால் ஒரு நம்பகமற்ற தன்மையும், சுய நலமும், அரசியல் ரீதியான சமாளிப்புகளும் தான் பிரதானமாகத் தெரியுமே தவிர அவர்களின் கருத்து எடுபடாது... மிகச் சிலர் உண்மையான உணர்வுகளை, சரியான முறையில் வெளிப் படுத்துவார்கள்... அந்த வகையில், தனது தெளிவான பேச்சின் மூலமும், தைரியமான கருத்தின் மூலமும், தனது பெரும் ரசிகர் கூட்டத்துக்கு மட்டும் அல்லாது உலகெங்கும் இருக்கும் கோடானு கோடி தமிழ் நெஞ்சங்களுக்கு நிதர்சனத்தைப் புரிய வைத்த பாங்கு என்றைக்கும் பாராட்டுக்கு உரியது...

நிதியையும் கொடுங்கள், நீதியையும் சொல்லுங்கள் என்று உரக்க குரல் கொடுத்து தான் தெளிவான பார்வை கொண்டவர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார் ரஜினி...

ராமேஸ்வரத்தில் ஈழருக்கு உதவி ஓடியிருக்க வேண்டிய வெள்ளத்தில் தம் வக்கிரங்களுக்கு வடிகால் தேடிக் கொண்ட வாயுள்ள ஜீவன்கள் இனியாவது திருந்தி ஓரணியில், சத்தியத்தின் பக்கம் நின்றால் சரித்திரம் அவர்களை வாழ்த்தும்...

மடியில் கனமில்லாத, சுய நலம் இல்லாத, இதை வைத்து அரசியலோ விளம்பரமோ தேட வேண்டியிராத, ஆட்சியை பிடிக்கவோ - தக்க வைத்துக் கொள்ளவோ தேவை இல்லாத சராசரி தமிழனின் உணர்வைப் படம் பிடித்து, அந்த உணர்வை எழுப்பிய ரஜினி என்னும் மனிதனுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்...

ஒரு நல்ல மனிதனின், வார்த்தைகள் எந்த விதமான நல்ல அதிர்வுகளை உருவாக்கும் என்பதை அவரது பேச்சைக் கேட்டவர்களும், படித்தவர்களும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள் - அவர்களும் நல்லவர்களாக, சுய நலம் இல்லாதவர்களாக இருந்தால்.....

நண்பர்களே,

ஓ பக்கங்களில் மட்டுமல்ல ஓராயிரம் பக்கங்களினாலும் சாதிக்க முடியாத சாதனையை "ஆம்பளைங்களாடா நீங்க?" என்ற ஒரே வாக்கியத்தில் சாதித்து சாமானியனை தட்டி எழுப்பும் சக்தி அந்த காந்தத்தில் உள்ளது... அந்தக் காந்தத்தின் அதிர்வலை மென் மேலும் பரவி, சமுதாய அவலங்களை சருகாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை....

ஈழத் தமிழர் விவகாரத்தை அரசியல் ஆக்கும் வியாதிகளின் கூச்சலுக்கு மத்தியில் ஆதாயம் கருதாமல் ஒலிக்கும் இந்தக் குரலுக்கு மதிப்புக் கொடுத்து உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்....

இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவரவர் கடவுளை வேண்டி, நம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் விரைவில் விடியல் பிறந்திட பிரார்த்திப்போமாக....

வாழ்க தமிழ், வாழ்க ரஜினி...

அன்புடன்
ஈ ரா

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home