Wednesday, November 14, 2007

தீர்வு 2 : கல்வித்துறை மேம்பாடு :

இன்றைக்கு தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டம் என்ற ஒன்று அறிமுகப் படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான ஆயத்தங்கள் தொடங்கப்பட உள்ளன. மிகவும் வரவேற்கத்தக்க விஷயம் இது. இவ்வளவு நாள் கழித்தாவது இதை உணர்ந்தார்களே என்று சந்தோஷப்படுவோமாக.

cbse மற்றும் matriculation மாணவர்கள் வெகு சுலபத்தில் ஐ.ஐ.டி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் எளிதாக சேர முடிகிறது. தமிழ் வழி மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிக நன்றாகவும் கடினமாகவும் படிப்பவர்கள் மட்டுமே இதை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியும். மற்றவர்கள் எல்லாம் பணம் சேர்த்து சுய நிதிக் கல்லூரிகளில் பொறியியல் பட்டப் படிப்போடு திருப்தி அடைய வேண்டியதுதான். பணமும் இல்லாதவர்கள் மேற்படிப்பை மறந்துவிட்டு வயிற்றுப்பாட்டைப் பார்க்க வேண்டியதுதான். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். சாதாரணமாக சொல்லி விட முடியும் இதை. ஆனால் அமுல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை நினைத்துப் பார்த்தாலே மலைப்பாக உள்ளது.

தற்சமயம் மத்திய அரசு மிக முனைப்பாக சில திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. சர்வ சிக்ஷ்ய அபியான் (அனைவருக்கும் கல்வி) போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் கட்டாயம் இன்னும் சில வருடங்களில் எழுத்தறிவு பெரும்பாலானவர்களுக்கு கிடைத்து விடும். ஆனால் வாழ்க்கைக்கும் இன்னும் வளமான எதிர்காலத்திற்கும் வழிகாட்டும் கல்வியை அடைய இன்னும் பல பேரின் பங்களிப்பு தேவை. உலக வங்கி மற்றும் எஜுகேஷன் செஸ் மூலம் கிடக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களால் இன்னும் வேகமான முன்னேற்றம் கிடைக்கும் என நம்பலாம். ஆனால் இதில் முக்கியமான பங்களிப்பு என்பது சேவை மனப்பான்மையும் மிக நல்ல ஆழ்ந்த அறிவும் கொண்ட ஆசிரியர்களிடமே உள்ளது. அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் எந்த கல்வித்திட்டமும் பயன் பெறாது. சுருங்கக் கூறின் எதிர்காலத்தின் முதுகெலும்பே ஆசிரியர்கள் தான்.

ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம் என்பர். அதேபோல ஒரு நல்ல ஆசிரியரும் நூறு தாய்களுக்குச் சமம் என்றும் கூறலாம்.

இன்றைக்கு இருக்கும் ஆசிரியர்களில் தகுதியற்ற பல பேர் உள்ளார்கள். இவர்கள் எப்படியோ உள்ளே புகுந்து விட்டார்கள். ஆழ்ந்த அறிவும் தொலை நோக்கும் இல்லாத இவர்களால் கிராமத்து மாணவனுக்கு எப்படி வழி காட்ட முடியும்? இவர்களுக்கு தங்களை வளர்த்துக் கொள்ள ஏதேனும் வாய்ப்போ அல்லது பயிற்சியோ இருக்கிறதா என்று தெரியவில்லை . மாணவர்கள் பல நேரங்களில் சுய உழைப்பையே நம்ப வேண்டி உள்ளது. ஒரு நடிகர் ஒருமுறை கூறினார், ஆசிரியர் திறமையோ அல்லது விருப்பமோ இல்லாதவர்கள் அரசின் வேறு துறைகளுக்கு எழுத்தராகவோ அல்லது வேறு பணிக்கோ மாற்றப்படுவீர்கள். உங்களால் எதிர்கால சமுதாயம் பாதிக்கப்பட கூடாது என்று. சத்தியமான வார்த்தைகள் அவை. வேறு எந்த அரசியல் கட்சியும் இவ்வளவு துணிவான கருத்தைக் கூற வில்லை.
ஆம். மற்ற எந்த துறையில் தகுதியின்மை இருந்தாலும் அது அத்துறையை மட்டுமே பாதிக்கும். ஆனால் ஆசிரியர்களிடம் தகுதியின்மை இருந்தால் அது ஒரு எதிர்கால சந்ததியையே பாதிக்கும்.

பொதுவாக நல்ல அறிவும் நல்ல மதிப்பெண்களும் எடுக்கும் மாணவர்கள் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுப்பது இல்லை. சராசரி மாணவர்கள் மட்டுமே பெரும்பாலும் இப் பயிற்சியைப் பெறுகிறார்கள். அவர்களிடம் இருந்து நல்ல தரத்தை எதிர்பார்ப்பது சரியாகாது. எனவே நல்ல தகுதி உள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கு பல சலுகைகளை யும் நல்ல ஊதியத்தையும் வழங்கவேண்டும்.

இனியும் ஆசிரியர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது ஆள் கிடைத்தால் போதும் என்றோ, அல்லது வேறு விதமாகவோ செய்து கொண்டே இருந்ததால் இன்னும் மோசமான நிலைமை ஏற்பட்டு விடும். தைரியமாகவும் அதே சமயம் எதிர்கால சந்ததியை மனதில் கொண்டு பொறுப்புடனும் ஒரு தெளிவான முடிவை இதில் எடுக்க தலைவர்கள் தயங்கக் கூடாது.

செய்வீர்கள தலைவர்களே?

அன்புடன்

ஈ. ரா.

1 Comments:

At January 2, 2008 at 9:21 PM , Blogger Felix said...

When we say about the government action, parallely should we need to thing each and every one responsiblities against the school education. Parents should forward their thoughts and action on the people teacher association helps on this.
Their lack will effects the students

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home